ஒருமையில் பேசிய எஸ்.ஐ.,க்கு கோர்ட் பிறப்பித்தது பிடிவாரன்ட்
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே பனையூர் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தம், விவசாயி. இவர் கடந்த 2016ம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். வங்கியில் கடன் மறுத்ததால், சங்க தலைவர், செயலர் மற்றும் ஊழியர்களுக்கும், நித்தியானந்தத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்து மரூர் போலீசில் நித்தியானந்தம் அளித்த புகாரை எஸ்.ஐ., வேம்பு விசாரித்தார். அப்போது அவர், கூட்டுறவு சங்க நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. விவசாயி நித்தியானந்தத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, அவர் அடித்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், நித்தியானந்தம், திருவையாறு நீதிமன்றத்தில் எஸ்.ஐ., வேம்பு, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது மனித உரிமைகள் மீறல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தஞ்சாவூர் மாவட்ட மனித உரிமைகள் மீறல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நேற்று காலை விசாரணைக்கு வந்தது.புகார்தாரர் சார்பில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் - மனித உரிமைகள் மீறல் - அசோக் ஆஜாரானார். இவ்வழக்கை நீதிபதி பூரணஜெயஆனந்த் விசாரித்தார். அப்போது, எஸ்.ஐ., வேம்பு வழக்கில் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். தற்போது வேம்பு, ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யாக உள்ளார்.