உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கல்லணை கால்வாயில் துாய்மை பணி துவக்கம்

கல்லணை கால்வாயில் துாய்மை பணி துவக்கம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் மும்பாலை வரை, 149 கி.மீ.,க்கு கல்லணை கால்வாய் வெட்டப்பட்டது. இதன் மூலம், 2.50 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாய், தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியான சிவாஜி நகர் முதல் இருபது கண் பாலம் வரை, 3 கி.மீ.,க்கு செல்லுகிறது. கல்லணை கால்வாய் கரையில் வசிக்கும் பொதுமக்களும், கரை வழியாக செல்பவர்களும் கழிவு பொருட்களையும், குப்பையையும் போட்டு, கால்வாயை குப்பை தொட்டி போல பயன்படுத்தி வருகின்றனர்.இதையடுத்து, தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, மாநகராட்சியில் உள்ள 690 துாய்மை பணியாளர்கள், குப்பை சேகரிக்கும் வாகனங்கள், கனரக வாகனங்கள் மூலம் கால்வாயில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகள், துணிகள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அகற்ற உத்தரவிட்டார். இதில், மாநகராட்சி மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி தலைமையில் நான்கு குழுக்கள் பிரிக்கப்பட்டு, பணிகளை மேற்கொள்கின்றனர். இது குறித்து சுபாஷ்காந்தி கூறியதாவது:துாய்மை பணியாளர்கள் மூலம் முதற்கட்டமாக, இரண்டு நாள்களில், 22 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் கொசு உற்பத்தியை தடுக்க எண்ணெய் பந்துகளை போட்டு வருகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் முடிவடையும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீர்வளத்துறை என்னாச்சு?

கல்லணை கால்வாய் கரையோரம் தான் நீர்வளத்துறை அலுவலகங்கள் உள்ளன. ஆனால், பலமுறை பொதுமக்கள் புகார் கூறியும் அந்த துறையினர் கண்டுகொள்ளவில்லை.தற்போதும் மாநகராட்சி துாய்மை பணி செய்யும் நிலையில், அவர்களுக்கு தேவையான எந்த உதவிகளையும் செய்யவில்லை என, மாநகராட்சி அலுவலர்கள் புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை