உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / அறுவடை நேரங்களில்  மழை பாதிப்புக்குள்ளாகும் மகசூல்  

அறுவடை நேரங்களில்  மழை பாதிப்புக்குள்ளாகும் மகசூல்  

தஞ்சாவூர்:காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் முடிந்து, பிப்., 1 முதல் கோடை பருவ நெல் சாகுபடி துவங்கியது.தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடியின் இயல்பான பரப்பளவு 37,500 ஏக்கராகும். ஆனால் இந்தாண்டு 31,750 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டன. இந்த பரப்பளவு குறைவுக்கு காரணம், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து காவிரி நீர்வரத்து இல்லை. வடகிழக்கு பருவ மழை குறைவால் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்தது தான் என விவசாயிகள் தெரிவித்தனர். இருப்பினும், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதுார், திருப்பனந்தாள், அம்மாபேட்டை, தஞ்சாவூர், ஒரத்தநாடு ஆகிய வட்டாரங்களில் நிலத்தடி நீர் ஆதாரமுள்ள இடங்களில் ஆழ்துளை மோட்டார் பம்புசெட் வாயிலாக கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில், மும்முனை மின்சாரம் போதிய அளவுக்கு கிடைக்காததால், கோடை நெல் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதிலும் சிக்கல் நிலவியது. இதையெல்லாம் கடந்து வந்த நிலையில் மே மூன்றாவது வாரத்தில் பெய்த மழையால் தஞ்சாவூர், அம்மாபேட்டை, ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய வட்டாரங்களில் கதிர்களுடனான நெற்பயிர்கள் சாய்ந்தன.கோடை பருவ நெற்பயிர்கள் அறுவடை 15 நாள்களுக்கு முன்னர் துவங்கியது. தற்போது, அம்மாபேட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவோணம் ஆகிய வட்டாரங்களில் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏக்கருக்கு குறைந்தது 2,400 கிலோ மகசூல் கிடைத்தால் லாபம் இருக்கும். ஆனால் மழையால் பயிர்கள் சாய்ந்து போனதால், ஏக்கருக்கு சுமார் 1,800 கிலோ மட்டுமே கிடைப்பதால் குறுவை, சம்பாவை தொடர்ந்து தற்போது கோடை பருவத்திலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:சில நாட்களாக அவ்வபோது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், தஞ்சாவூர் அருகே வாழமர்கோட்டை, வரவுக்கோட்டை, சடையார்கோவில், பொன்னாப்பூர், அம்மாபேட்டை, புத்துார், உடையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கோடை பருவ நெற்பயிர்கள் கதிருடன் சாய்ந்துவிட்டன. இதனால், 2,000 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைவிட்டாலும் பயிர்கள் காய்வதற்கு குறைந்தது ஒரு வார காலமாகும். நெல்மணிகள் சாய்ந்து கிடப்பதால் இயந்திரத்தில் அடிபட்டு மகசூல் இழப்பு ஏற்படும்.சராசரியாக ஏக்கருக்கு, 10 மூட்டைகள் வந்தால், தற்போது அறுவடை செய்தால் வெறும் ஆறு மூட்டைகள் தான் வரும். எனவே, வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை