முன்னணி நிறுவன பொருட்கள் போலியாக விற்ற 6 பேர் கைது
தஞ்சாவூர்:ஆப்பிள் நிறுவன மொபைல் போன்களின் போலி உதிரி பாகங்கள் விற்றவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆப்பிள் நிறுவன மொபைல் போன்களில் போலி உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல, திருப்பூரில், 'டிக்ஸி ஸ்காட்' என்ற முன்னணி நிறுவனத்தின் பெயரை சட்ட விரோதமாக பயன்படுத்தி உடைகள் விற்கப்படுவதாக, சென்னை எழும்பூரில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் புகார் தரப்பட்டுள்ளது. இது குறித்து அப்பிரிவு போலீசார், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருப்பூரில் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதியில் ஆப்பிள் நிறுவன மொபைல் போன்களின் போலி உதிரி பாகங்கள் விற்ற, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நயன் சிங், 50, அசோக்குமார், 39, உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில், டிக்ஸி ஸ்காட் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, சட்ட விரோதமாக உடைகள் விற்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் கேஷரி, 45, நேற்று கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து, 1.24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் போன்களின் போலி உதிரிபாகங்கள், 4.89 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, டிக்ஸி ஸ்காட் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சட்ட விரோதமாக விற்கப்பட்ட உடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.