கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட பக்தர்கள் அட்மிட்
தஞ்சாவூர்:கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட, 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலில், ஏப்., 6ம் தேதி இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் காலை முதல் வாந்தி, வயிற்றுபோக்கு, மயக்கம் என, உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.இவர்கள், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கறம்பக்குடியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த தஞ்சாவூர் சுகாதாரத்துறை அலுவலர்கள், டாக்டர்கள் குழுக்கள் நேற்று கரம்பயம் பகுதியில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து, கிராம மக்களுக்கு பரிசோதனை செய்தனர்.