உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / 30 நாள் கொலு பொம்மை கண்காட்சி செப்., 17ல் துவங்கி அக்.,16ல் நிறைவு

30 நாள் கொலு பொம்மை கண்காட்சி செப்., 17ல் துவங்கி அக்.,16ல் நிறைவு

தஞ்சாவூர்: நவராத்திரியை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களின் முன்னேற்றத்துக்கு பயன்படும் வகையில் கும்பகோணத்தில் 30 நாட்கள் கொலு பொம்மை விற்பனை கண்காட்சி நடக்கிறது. தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை மாவட்ட மகளிர் திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி, நேரடிகடன், பொருளாதாரக் கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பல வகையான பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதோடு மட்டுமின்றி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவிலும் நடத்தப்படும் கண்காட்சிகள் மூலமாகவும் விற்பனை செய்கின்றனர். தற்போது, நவராத்திரியை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை 30 நாட்கள் மாவட்ட அளவில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் அருகில் உள்ள தங்கம்மாள் திருமண மண்டபத்தில் கொலு பொம்மை கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில் மற்ற மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களும் பங்கு பெறுகின்றனர். விற்பனையின் மூலம் கிராமப்புற மகளிர் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு அமைவதுடன், தங்களது பன்முகத் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. கண்காட்சியில் 30 கடைகள் அமைக்கப்பட்டு, நவராத்திரி கொலு பொம்மைகள், மண் பொம்மைகள், தஞ்சை ஓவியங்கள், கலைத்தட்டுகள், தலையாட்டி பொம்மைகள், சணல் பொருட்கள், கைவினைப் பொருட்கள், பேன்ஸி பொருட்கள், குத்து விளக்குகள், மரச்சிற்பங்கள், பாக்கு மட்டைகள், ஸ்படிக மணி மாலைகள், கைத்தறி துணிகள், ஐம்பொன் நகைகள், எம்ராய்டரி துணி வகைகள் விற்பனை செய்யப்படும். கண்காட்சி மூலம் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு, பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து பொருட்களை வாங்கி மகளிர் குழு முன்னேற்றத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி