தண்ணீர் கேட்டு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
தஞ்சாவூர்:கரூர் மாவட்டம் மாயனுார், காவிரி ஆற்றின் வலது கரையில், கட்டளை கதவணையிலிருந்து, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பிரிகிறது.இப்பாசன வாய்க்கால் கரூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் வழியாக, 133 கி.மீ., பயணித்து தஞ்சாவூர் பிடாரி ஏரியில் கலக்கிறது. திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 20,622 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது.அதுபோல, பெட்டவாய்தலை காவிரி ஆற்றில் இருந்து வாழவந்தான்கோட்டை ஏரியில் உய்யகொண்டன் வாய்க்கால் தண்ணீரை நிரம்பிய பிறகு, உய்யகொண்டன் நீடிப்பு வாய்க்கால், தஞ்சாவூர் மாவட்டம் சேராண்டி ஏரியில் முடிவடைகிறது. இக்கால்வாய் மூலம், 32,742 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.இந்நிலையில், இந்தாண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்த நாளில் கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யகொண்டான் வாய்க்காலில் தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டது.ஆனால், இரண்டு மாதங்களாகியும், இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் வராத நிலையில், விவசாயிகள் சாகுபடி செய்யாமல் தவிக்கின்றனர்.இதையடுத்து, கட்டளை மேட்டு வாய்க்காலிலும், உய்யகொண்டன் நீடிப்பு வாய்க்காலிலும் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள், விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் கண்ணன் தலைமையில், செங்கிப்பட்டியில் நேற்று காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். பாசனத்துக்கு தண்ணீரை திறக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.அதுபோல, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில், விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.