உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / எம்.எல்.ஏ., ரேஷன் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்

எம்.எல்.ஏ., ரேஷன் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதிக்குட்பட்ட புள்ளம்பூதங்குடி கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. இதை மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.இதையறிந்த கரும்பு விவசாயிகள், ரேஷன் கடை முன் குவிந்து, 'மூன்று ஆண்டுகளாக போராடும் கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை. எடக்குடியில் பொதுமக்களின் வாழ்விடமாக திகழும் மணல்மேட்டில் இருந்து மணல் அள்ளுவதை தடுத்து போராட்டம் நடத்தும் மக்களை சந்திக்கவில்லை.'தொகுதியில் விளம்பரம் செய்து கொள்ள மட்டுமே வரும் எம்.எல்.ஏ., நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், ரேஷன் கடையை திறந்து வைக்கக்கூடாது' எனக்கூறி கோஷமிட்டனர்.தஞ்சாவூர் புறநகர் டி.எஸ்.பி., முருகவேல், விவசாயிகளிடம் பேச்சு நடத்தினார். அப்போது, 'விவசாயிகளை கைது செய்வோம்' என கூறியதால், விவசாயிகளுக்கும், டி.எஸ்.பி.,க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எம்.எல்.ஏ.,வுக்கு பதிலாக, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ரேஷன் கடையை திறந்து வைத்தார். அதன் பிறகு விவசாயிகள் கலைந்தனர்.கரும்பு விவசாயிகள் கூறியதாவது:ரேஷன் கடை திறப்புக்கு எம்.எல்.ஏ., வருவதாக தகவலறிந்து அவரை சந்திக்க சென்றோம். போலீசார் எங்களை வரக்கூடாது எனக்கூறி கைது செய்ய முயன்றனர். எம்.எல்.ஏ., தொகுதி பிரச்னைகளை, விவசாயிகளின் பிரச்னைகளை கண்டுகொள்வது கிடையாது. அவர் ஒரு குற்றவாளி. இப்படி இருக்க அவரது கையால், ரேஷன் கடையை திறக்க வேண்டாம். அதிகாரிகள் யார் வேண்டுமானாலும் திறக்கட்டும் எனக் கூறினோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ