உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / எம்.எல்.ஏ., அலுவலகத்தை பூட்டி மூன்று வருஷமாச்சு!

எம்.எல்.ஏ., அலுவலகத்தை பூட்டி மூன்று வருஷமாச்சு!

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், 2000ம் ஆண்டு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக பாலசுப்பிரமணியன் இருந்தபோது, புதிய எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டு, அப்போதைய அமைச்சர் கோ.சி.மணியால் திறக்கப்பட்டது. பின், 2001 முதல், 2016 வரை காங்கிரஸ் கட்சியின் ரெங்கராஜன் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அவர் எம்.எல்.ஏ., அலுவலகத்தை பயன்படுத்தியது இல்லை. எனினும், மாதம் ஒருமுறை அலுவலகப் பணியாளர்கள் சுத்தம் செய்வர்.கடந்த, 2016ல் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, வழக்கறிஞர் சேகர், எம்.எல்.ஏ., ஆனார். அவர் நீதிமன்றம் எதிரே உள்ள தன் அலுவலகத்தின் ஓர் அறையை எம்.எல்.ஏ., அலுவலகமாக பயன்படுத்தி வந்தார்.கடந்த 2021ம் ஆண்டு, சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வைச் சேர்ந்த அண்ணாதுரை வெற்றி பெற்றார். அவ்வப்போது அந்த அலுவலகத்திற்கு வந்த அவர், சிறிது காலத்திற்குப் பிறகு வரவில்லை.மேலும், 2022ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலினின், 'எம்.எல்.ஏ., அலுவலகங்களில் இ-சேவை மையம் திறக்க வேண்டும்' என்ற உத்தரவால், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., அலுவலகத்திலும், இ-சேவை மையம் திறக்கப்பட்டது. சில மாதங்களில் அதுவும் பயன்பாடு இல்லாமல் போனது; எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கும் பூட்டு போடப்பட்டு விட்டது.இதற்கிடையில், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., அண்ணாதுரை, கட்சியில் தெற்கு மாவட்ட செயலராக அறிவிக்கப்பட்டார். தற்போது எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வருவதைவிட, கட்சி அலுவலகத்தையே, எம்.எல்.ஏ., அலுவலகமாக பயன்படுத்தி வருவதாக தொகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !