நகராட்சி குளத்து மண் விற்பனை; தடுத்த இருவரை கொல்ல முயற்சி
தஞ்சாவூர்; நகராட்சி குளத்தில் இருந்து மண்ணை எடுத்து தனியாருக்கு விற்பதை தட்டிக்கேட்ட இருவர் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம், பாக்கியம் நகரைச் சேர்ந்தவர் ராஜபிரபு, 30; நீர்நிலை ஆர்வலர். நகராட்சிக்கு சொந்தமான செம்புரான் குளத்தில், துார்வாரும் பணியின் போது மண்ணை விற்பனைக்காக வெளியில் கொண்டு செல்வதாக இவருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மதியம் ராஜபிரபு, தன் நண்பர் பாண்டி, 31, என்பவருடன் குளத்திற்கு சென்றார். அங்கு, நகராட்சி பணிக்காக என, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்ட லாரியில், குளத்தில் அள்ளப்பட்ட மண்ணை ஏற்றி, தனியாருக்கு சொந்தமான இடத்தில் கொட்டியுள்ளனர். இது தொடர்பாக, அங்கிருந்தவர்களிடம் ராஜபிரபு விசாரித்தார். அப்போது, ராஜபிரபு, பாண்டி இருவரையும் கொலை செய்யும் நோக்கில், டிரைவர் லாரியை இயக்கி மோத முயன்றார். இதில், இருவரும் நுாலிழையில் உயிர் தப்பினர். அவர்கள் புகாரின்படி, பட்டுக்கோட்டை நகர போலீசார் விசாரிக் கின்றனர்.