ஹெல்மெட் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு வாழைத்தார் வழங்கி கவுரவித்த போலீசார்
தஞ்சாவூர்:ஹெல்மெட் அணிந்து டூ - வீலரில் வந்தவர்களுக்கு, ஒரு தார் வாழைப்பழம் வழங்கி, போலீசார் கவுரவித்தனர். தஞ்சாவூரில், நுகர்வோர் பாதுகாப்பு மையம், போக்குவரத்து போலீசார் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதில், எஸ்.பி., ராஜாராம் பங்கேற்று, ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி, அவர்களுக்கு ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினார். ஹெல்மெட் அணிந்து வந்த, 50 பேருக்கு, திருவையாறு வாழை விவசாயி மதியழகன் மூலம், ஒரு தார் வாழைப்பழங்களை வழங்கினார். இந்நிகழ்வில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். எஸ்.பி., ராஜாராம் கூறுகையில், ''ஹெல்மெட் அணிவது மிகவும் அவசியமானது. அது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பை அளிக்கும். ஹெல்மெட் அணியாமல், டூ - வீலரை ஓட்டக்கூடாது. ஒரு விழிப்புணர்வுக்காக, 2 டன் வாழைப்பழங்களை இலவசமாக வழங்கிய விவசாயி மதியழகனுக்கு, வாழ்த்துக்கள்,'' என்றார்.