உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / அங்கான்வாடி, குடிநீர் தொட்டி தனி நபருக்கு கிரயம் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

அங்கான்வாடி, குடிநீர் தொட்டி தனி நபருக்கு கிரயம் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே இடையாத்தி கிராமத்தில், பசுக்காரன் தெருவில், குழந்தைகள் அங்கன்வாடி மற்றும் குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம குழந்தைகள் பயன்பெற்று வந்தனர்.இந்நிலையில், தனி நபர்கள் திட்டமிட்டு வருவாய்துறை அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகள் உதவியுடன், முறைகேடாக சிட்டா, அடங்கள் தயாரித்து, கடந்த மே 3ம் தேதி, தானம் செட்டில்மெண்ட் கிரய ஆவணம் பதிவு செய்து, அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தனர்.இது குறித்து பொதுமக்கள் சார்பில், சம்பந்தபட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., மற்றும் திருவோணம் தாசில்தார் இடத்தினை நேரடி ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.விசாரணையில், வருவாய்துறை அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகள் பலர் கூட்டுச் சேர்ந்து, முறைகேடாக ஆவணம் பதிவு செய்தது தெரியவந்தது. அதன்பேரில், வி.ஏ.ஓ., செல்வராஜ், தலையாரி அன்பழகன் இருவரும் கடந்த ஆக., 29ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்நிலையில், முறைகேட்டில் ஈடுப்பட்ட ஆவண எழுத்தர், சார்-பதிவாளர் மற்றும் எழுதி கொடுத்தவர், எழுதி வாங்கியவர் உள்ளிட்ட பலர் மீது, வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.ஆனால், இதுவரை எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்கப்படாமல், தாமதபடுத்தி வருவதை கண்டித்தும், மோசடி ஆவண பதிவு செய்த வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நேற்று, இடையாத்தி கடைத்தெருவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ