உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / குடற்புழு அகற்றும் மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு?

குடற்புழு அகற்றும் மாத்திரை சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு?

தஞ்சாவூர்: குடற்புழு நீக்கும் மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரத்தில், அரசு பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த கண்ணன் - பரிமளா தம்பதியின் மூன்றாவது மகள் கவிபாலா, 12, பள்ளத்துார் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில், சுகாதாரத்துறை சார்பில், குடற்புழு நீக்கும், 'அல்பென்டாசோல்' மாத்திரையை, மாணவர்களுக்கு அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் குழுவினர் நேற்று வழங்கினர்.மதியம், 12:00 மணிக்கு மாத்திரையை சாப்பிட்ட கவி பாலா, பள்ளியில், 2:00 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்த நிலையில், இறந்தார். சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.அதுபோல, மாத்திரை சாப்பிட்ட, புக்கரம்பையைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி தியா, 15, ஆண்டிக்காடு பிளஸ் 1 மாணவி சகாயமேரி, 16, ஆகியோரும் மயக்கம் ஏற்பட்ட நிலையில், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுகின்றனர்.கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், பட்டுக்கோட்டை சாலையில், அனைத்து மாணவர்களையும் பரிசோதனை செய்ய வேண்டும்; இதற்கு மாத்திரை தான் காரணமா என, விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும் எனக்கூறி, மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

4.37 லட்சம் பேருக்கு பிரச்னையில்லை

பொது சுகாதாரத்துறை தஞ்சாவூர் மாவட்ட துணை இயக்குநர் கலைவாணி கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில், குடற்புழு நீக்க மாத்திரை, 4.37 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், பள்ளத்துார் பள்ளியில் மட்டும் 389 மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஏழாம் வகுப்பு மாணவி மாத்திரை உட்கொண்ட சில மணி நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்து இறந்துள்ளார். எனினும், அவர் இறப்புக்கு குடற்புழு நீக்க மாத்திரை மட்டுமே காரணம் அல்ல. பிரேத பரிசோதனைக்கு பின்தான் உண்மை தெரிய வரும். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி