கண்ணனாற்றில் தற்காலிக தரை பாலம் உடைப்பு
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தையும், திருவாரூர் மாவட்டத்தையும் இணைக்கும் மதுக்கூர் அருகே பெரியக்கோட்டை வழியாக கண்ணனாறு செல்கிறது. இந்த ஆறு வடுவூர் ஏரியில் தொடங்கி, குலமங்கலம், சமையன்குடிக்காடு, சொக்கனாவூர், பெரியக்கோட்டை, முத்துப்பேட்டை வழியாக கடலில் கலக்கிறது.இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த ஆற்றில் அதிகளவு நீர் செல்வதால், அவ்வப்போது கரைகள் உடைப்பு ஏற்படுவதும், ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலங்கள் மூழ்குவதும் வழக்கம்.இதையடுத்து, இந்த ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.தொடர்ந்து 13 கோடி ரூபாய் செலவில் பெரியகோட்டைக்கும், சொக்கநாவூருக்கும் இடையே கண்ணனாற்றின் குறுக்கே, பெரியகோட்டையில் உயர்மட்ட பாலம் கடந்த 6 மாதங்களாக அமைக்கப்படுகிறது. இதனால் பாலத்தின் அருகிலேயே தற்காலிக தரைபாலம் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், பெய்த மழையின் காரணமாக, நேற்று முன்தினம் பெரியக்கோட்டை கண்ணனாற்றில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பெரியகோட்டைக்கும் சொக்கனாவூருக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இதனால், பொதுமக்கள் 3 கி.மீ., சுற்றி, கீழகுறிச்சி, ஒலையகுண்ணம், கன்னியாகுறிச்சி, எளவனுார் வழியாக சென்று வருகின்றனர். தற்போது, கண்ணனாற்றில் மழையால், உயர்மட்ட பாலத்தின் கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டன.