உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / வசதி இல்லாத எங்களுக்கு உரிய நீதி வேண்டும்! தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநரிடம் இளம்பெண் கண்ணீர்

வசதி இல்லாத எங்களுக்கு உரிய நீதி வேண்டும்! தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநரிடம் இளம்பெண் கண்ணீர்

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் அண்ணன் கைது செய்யப்பட்டதால், போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடித்த தங்கைகளில் ஒருவர் இறந்த விவகாரம் தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் நேற்று விசாரணை நடத்தினார்.தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவேரியை சேர்ந்த தினேஷ், 32, மீது பொய் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதாக கூறி, தினேஷின் தங்கையரான மேனகா, 31, கீர்த்திகா, 29, போலீஸ் ஸ்டேஷன் முன் ஏப்., 8ம் தேதி விஷம் குடித்தனர். தஞ்சாவூர் மருத்துவமனையில் கீர்த்திகா ஏப்., 9ம் தேதி உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார். இச்சம்பவம் தொடர்பாக, இன்ஸ்பெக்டர் சர்மிளா ஏப்., 11ம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இரண்டு எஸ்.ஐ.க்கள், ஒரு பெண் ஏட்டு ஆகியோர் 16ம் தேதி பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக, தற்கொலைக்கு துாண்டுதல், எஸ்.சி., -- எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் மாற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.இன்ஸ்பெக்டர் சர்மிளா உட்பட நான்கு போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கீர்த்திகா உடலை வாங்க மறுத்து, நடுக்காவேரியில், 8வது நாளாக குடும்பத்தினர், உறவினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக, மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன், நடுக்காவேரி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தினார். கீர்த்திகா வீட்டிற்கு சென்று, தந்தை அய்யாவு, பெரியம்மா சுசிலா ஆகியோரிடம் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார்.தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கீர்த்திகா சகோதரி மேனகாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மேனகா, 'போலீசார் மோசமாக நடந்து கொண்டனர். நாங்கள் வசதி இல்லாதவர்கள். எங்களுக்கு நியாயமான தீர்வை வாங்கிக் கொடுங்கள்' என, ஆணைய இயக்குநரிடம் கண்ணீர் வடித்தார்.விசாரணையின் போது, எஸ்.பி., ராஜாராம், தஞ்சாவூர் ஆர்.டி.ஓ., இலக்கியா உடனிருந்தனர்.

தமிழக அரசுக்கு நோட்டீஸ்@

இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நடுக்காவேரி துர்கா மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.தனபால் விசாரித்தார். அரசு தரப்பில், 'சம்பவம் குறித்து பதிவான வழக்கை தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., விசாரிக்கிறார்' என, தெரிவித்தது.நீதிபதி, 'இறந்தவரின் உடலை பெறுவது மனுதாரரின் முடிவை பொறுத்தது. உடலை பெற்றுக் கொள்ளவில்லை எனில் போலீசார் சட்டத்திற்குட்பட்டு முடிவெடுக்க வேண்டும். இதில் நீதிமன்றம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி., தஞ்சாவூர் எஸ்.பி., ஏப்., 22ல் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது' என, உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ