| ADDED : மே 05, 2024 03:28 AM
கம்பம், : கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் கண்மாய்களை தூர்வாரி பராமரிக்க அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14,707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. லோயர்கேம்பில் ஆரம்பித்து பழனிசெட்டிபட்டி வரை வயல்கள் உள்ளன. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்ய 17 வாய்க்கால்கள், பல கண்மாய்கள் உள்ளன. இந்த வாய்க்கால்களில் மடைகள், ஷட்டர்கள், கரைகள் பழுதடைந்துள்ளது . வாய்க்கால் மற்றும் கண்மாய்களை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகி விட்டது.இது குறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில், வைரவன் வாய்க்கால் 9.5 கி.மீ. கம்பம் சின்ன வாய்க்கால் 10.4 கி.மீ, உத்தமுத்து 12.78 கி.மீ. பாளையம் பரவு 13.60 கி.மீ., சின்னமனுார் 15.51 கி.மீ. மார்க்கையன்கோட்டை 3.35 கி.மீ. சீலையம்பட்டி .2.79 கி.மீ. கோட்டூர் 4,43 கி.மீ. கூளையனுார் 2.89 கி.மீ. உப்பார் பட்டி 5.89 கி.மீ. 'உப்புக் கோட்டை 3.31 கி.மீ. வீரபாண்டி 2.87 கி.மீ. சத்திரப் பட்டி 2.69 கி.மீ. தாமரைகுளம் 4.59 கி.மீ. உள்ளிட்ட 17 வாய்க்கால்கள் தூர் வாரி பத்தாண்டுகளை கடந்து விட்டது. வீரப்ப நாயக்கன் குளம், தாமரைக் குளம், குப்பிசெட்டி குளம், கருங்கட்டான்குளம், செங்குளம் உள்ளிட்ட கண்மாய்கள் தூர்வாராமல் மண் மேவி மேடாகி வருகிறது. இதனால் தண்ணீரை தேக்கி விவசாயம் செய்வதில் சிரமம் உள்ளன. தற்போது கோடை காலமாக இருப்பதால், பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் இல்லை. எனவே கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பாசன வாய்க்கால்கள் மற்றும் கண்மாய்களை தூர் வார அரசு முன்வர வேண்டும். இதற்கென சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.