UPDATED : மே 26, 2024 06:26 AM | ADDED : மே 26, 2024 04:44 AM
கம்பம்: கம்பம் அரசு மருந்துவமனையில் குப்பை, மருத்துவ கழிவுகளை குழி தோண்டி புதைப்பது மற்றும் தீ வைத்து எரிப்பது வாடிக்கையாக உள்ளது.கம்பம் அரசு மருத்துவமனை பிரசவம் பார்ப்பதில் மாவட்டத்தில் முதலிடம் பெறுகிறது. மாதத்திற்கு 200 பிரசவங்கள் நடக்கிறது. சிசு பராமரிப்பு பிரிவு, ரத்தவங்கி, விஷ முறிவு பிரிவு, தொற்றுநோய் சிகிச்சை பிரிவு, 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர் வசதிகள் உள்ளன. தற்போது ரூ.10 கோடியில் சீமாங் சென்டருக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. -தினமும் ஆயிரம் வெளிநோயாளிகளும், 300 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். கடந்தாண்டு தரச்சான்றும் பெற்றது. தரச்சான்று பெற்ற பின் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறதுகுறிப்பாக மதியம், இரவு 9 மணிக்கு மேல் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. பணியில் இருக்கும் நர்சுகள் அலைபேசியில் விபரத்தை கூறி சிகிச்சை தருகின்றனர். இங்கு சேகரமாகும். குப்பை, மருந்து மாத்திரை டப்பாக்கள், பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள் என மருத்துவ கழிவுகளும் மருத்துவமனை வளாகத்தில் குழி தோண்டி புதைக்கின்றனர். சில சமயங்களில் தீ வைத்து எரிக்கின்றனர். டயாலிசிஸ் யூனிட் கட்டடத்திற்கு பின் பக்கம் செப்டிக் டேங்க் நிரம்பி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அருகில் பிரசவ வார்டு உள்ளது. தொற்று நோய்களை பரப்பும் கொசுக்களால் பிறந்த குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.மருத்துவமனை வளாகத்தில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதும், மருத்துவ கழிவுகளை உரிய முறையில் கையாளாமல் இருப்பதும் பெரும் அவலம். இது குறித்து விசாரிக்க சென்றால் மருத்துவ அலுவலர் 15 நாள் விடுப்பில் இருப்பதாக கூறுகின்றனர். இணை இயக்குநர் கம்பம் அரசு மருத்துவமனையை விசிட் செய்து, நிர்வாகம் செம்மையாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.