தேனி வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு
தேனி: தேனியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதும் தடை செய்தல், உணவுப்பொருட்கள் விற்பனை தொடர்பாக நகராட்சி சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தேனியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் சுகாதார பிரிவினரால் கைப்பற்றியும், பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனையை தடுக்க நகராட்சி சுகாதார பிரிவினர், உணவுப்பாதுகாப்பு துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் இணைந்து செப்., கடைசி வாரத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஓட்டல்கள், சாலைஓர உணவகங்கள், உணவுப்பொருள் விற்பனையாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யாமல் இருப்பது. உணவுப்பொருட்களில் செயற்கை நிறமி பயன்பாடு, பயன்படுத்திய எண்ணெய் மறுசுழற்சி உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.