ஊருணியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றம்
போடி : போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் கெப்பண கவுண்டர் ஊருணியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கால்நடை கொட்டம், கோயிலை மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மண் அள்ளும் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டன.இப்பேரூராட்சிக்கு உட்பட்டது கெப்பண கவுண்டர் ஊருணி. 7.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஊருணியின் மேற்கு பகுதியில் தனி நபர்கள் அரை ஏக்கர் அளவில் நிலத்தை ஆக்கிரமித்து 40 ஆண்டுகளாக வீடுகள், கால்நடை கொட்டம், கோயில் கட்டி குடியிருந்து வந்தனர். மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாக மூலம் ஊருணியை சர்வே மேற்கொண்டதில் வீடுகள் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரிய வந்தது. வீடுகளுக்கு மின் இணைப்பு, சாக்கடை, குடிநீர் வசதிகளும் வழங்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. தானாக அகற்றாத நிலையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.வழக்கை விசாரித்த நிலையில் நீர் நிலைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கட்டடங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.இதனை ஒட்டி நேற்று மேலச் சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் கண்ணன் காளி ராமசாமி தலைமையில் நிர்வாக அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் மண் அள்ளும் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு இருந்த 6 வீடுகள், கோயில், கால்நடை கொட்டம் இடித்து அகற்றப்பட்டன.