| ADDED : ஏப் 16, 2024 04:55 AM
போடி: தேனி லோக்சபா தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற ஒவ்வொருவரும் தனக்கென்ற ஒரு பாணியில் களம் இறங்கி ஆட்களை திரட்டி, பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தலுக்கு மூன்று நாட்கள் உள்ள நிலையில் மூன்று கட்சிகளும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தி.மு.க., அ.ம.மு.க., வினர் லோக்சபா தேர்தல் என்பதை மறந்து உள்ளாட்சி தேர்தல் அளவிற்கு கீழே இறங்கி தெருத் தெருவாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதியில் ஓட்டு உள்ளவர்கள் பிழைப்பு தேடி தொழில், வேலை சம்பந்தமாக திருப்பூர், சென்னை, கோவை, கேரளா பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக ஏராளமானோர் சென்றுள்ளனர். இவர்கள் பூர்வீக ஊர் உறவு விட்டு போய் விடக்கூடாது என்பதற்காக ஓட்டுக்களை சொந்த ஊரில் வைத்துள்ளனர். தொகுதி அளவில் 20 ஆயிரம் பேர் வெளியிடங்களில் வசிப்பதால், அவர்களது ஓட்டுக்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களது ஓட்டுக்களும் கணக்கெடுத்து அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஓட்டுப்பதிவு அன்று குடும்பத்துடன் வந்து ஓட்ளிக்க அழைக்கின்றனர்.இவர்களை அழைத்து வர கட்சி நிர்வாகிகளை ஈடுபட்டு உள்ளனர். வெளியூரில் உள்ளவர்களை ஊருக்கு வருவதற்கு பஸ் போக்குவரத்து 'கவனிப்பு' உள்ளிட்ட செலவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி கட்சி நிர்வாகிகள் பேசுகின்றனர். அவர்களது ஓட்டுக்கள் அப்படியே அள்ளுவதற்கு ஒரு ஓட்டுக்கு மூன்று இலக்கம் வழங்கவும், முதல் கட்டமாக குறிப்பிட்ட தொகையை அவர்களது வங்கி கணக்கு அல்லது ஜி.பே., யில் அனுப்ப திட்டமிட்டு உள்ளனர். ஓட்டளிக்க வந்தவுடன் 'கவனிப்பு' என்பது வேறு என்று 'புதுடெக்னிக் ' யை பயன்படுத்துவதில் தி.மு.க., அ.ம.மு.க., வினர் மும்முரம் காட்டி உள்ளனர்.