தேனி போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதி சோதனை நடைமுறையால் வேதனை அடையும் வியாபாரிகள்
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். இந்த போக்குவரத்து சோதனை மாற்றத்தால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.மாவட்ட தலைநகரான தேனியின் மையப்பகுதியில் (பழைய பஸ் ஸ்டாண்ட்) காமராஜர் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வனத்துறையின் அனுமதியோடு வால்கரட்டில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட் 2014 பயன்பாட்டிற்கு வந்தது. பழைய பஸ் ஸ்டாண்ட்யை சுற்றி மெயினர் பஜார், கடைவீதி, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.இரு ஆண்டுகளுக்கு முன் தேனி-மதுரை ரோடு அரண்மனைப்புதுார் விலக்கில் ரயில்வே கேட்டில் வாகனங்கள் நின்று செல்வதை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. தற்போது வரை 35 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வேளாண் பொறியியல் அலுவலகம் முதல் அரசு ஐ.டி.ஐ., வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் புது பஸ் ஸ்டாண்ட் வழியாக இயக்கப்படுகின்றன. போக்குவரத்து மாற்றம்
இந்நிலையில் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க பரிசோதனை முறையில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி ஒரு வழி பாதையாக மாற்றப்படுவதாக சாலை பாதுகாப்பு குழு முடிவு செய்து ஆக.,10 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மதுரை ரோட்டில் இருந்து கம்பம், பெரியகுளம் ரோடு செல்லும் வாகனங்கள் பழைய பஸ் ஸ்டாண்டிற்கும் நுழைந்து செல்கின்றனர். அதே போல் பெரியகுளம் ரோட்டில் இருந்து கம்பம் ரோடு செல்லும் வாகனங்கள் பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்து கம்பம் ரோட்டில் இணைகிறது. இந்த நடைமுறையால் நேருசிலை போக்குவரத்து சிக்கனலை முடக்கி வைத்துள்ளனர்.கம்பம், போடியில் இருந்து வரும் பஸ்கள் பயணிகளை பகவதியம்மன் கோயில் தெரு ரோட்டில் இறக்கி விட்டு செல்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தனியார் வாகனங்கள் முன்பு பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாது. ஆனால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றத்தால் அனைத்து வாகனங்கள், பஸ்கள், ஆட்டோக்கள் எல்லாம் பழைய பஸ் ஸ் ஸ்டாண்டிற்குள் சென்றுதான் வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் மினி பஸ்கள் மூன்று இடங்களில் நிறுத்தி கொள்வது நெரிசலை மேலும் அதிகரிக்கிறது. மினி பஸ்களை பின்பற்றி ஆட்டோக்களும் பல இடங்களில் நிறுத்தி பணிகளை ஏற்றுகின்றனர்.பெரியகுளம் ரோட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வாகனங்கள், கம்பம், போடியில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் வாகனங்கள் நேரு சிலையை கடந்து செல்லும்போது குறுக்கும், நெடுக்குமாக வாகனங்கள் சென்று விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதில் அவ்வப்போது வாகன ஓட்டிகள் சண்டையிடுவதும் தொடர்கிறது. வெளியூர் பயணிகள் புது பஸ் ஸ்டாண்ட் செல்ல பழைய பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கின்றனர். மதுரை ரோட்டில் இருந்து வாகனங்கள் நுழையும் பகுதியில் டூவீலர்களை வரிசையாக நிறுத்தி உள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் நிலவுகிறது. பாதி வழியில் நிறுத்தும் டவுன்பஸ்கள்
மாயன், விவசாயி, அரப்படித்தேவன்பட்டி: சாகுபடி செய்த பூக்களை தேனி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வருவேன். சில நாட்களாக ஆண்டிப்பட்டியில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டிற்கு இயக்கப்பட்ட பஸ்கள் புது பஸ் ஸ்டாண்ட்டுடன் நிறுத்தப்படுகிறது. இரு பஸ்கள் மாறி பூக்களை கொண்டு வர வேண்டியுள்ளது.இதனால் கூடுதல் செலவு, நேரம் விரயமாகிறது. ஆட்டோவில் கொண்டு வந்தால் பூக்கள் விலை குறைகின்ற போது அசல் கூட கிடைப்பதில்லை. இதே போல் பலர் பாதிக்கப்படுகின்றனர். பழைய பஸ் ஸ்டாண்ட் வரை இயக்கப்படும் பஸ்களை பழைய முறைப்படி இயக்க வேண்டும். ரோட்டை கடக்க முடியாமல் அவதி
மணிகண்டன், டிரைவர், உப்பார்பட்டி: பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்படுவதால், பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்வதில் சிரமம் உள்ளது. தொடர்ந்து வரும் வாகனங்கள் ஹாரன் அடிப்பதால் பஸ்களை விரைவாக எடுக்கின்றனர். இதனால் பஸ்சில் ஏற பயணிகள் சிரமமப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்ட் குறுகிய பாதையில் தொடர்ச்சியாக வாகனங்கள் நுழைவதால் முதியவர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் ரோட்டை கடக்க முடியவில்லை. வியாபாரிகள் பாதிப்பு
நடேசன், தலைவர், தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கம்: நகரில் அமல்படுத்திய போக்குவரத்து மாற்றத்தால் எந்த பயனும் இல்லை. இதனால் பயணிகள், வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். பலசரக்கு வியாபாரம் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. தேனி வந்து வாகனங்களை நிறுத்தி பொருட்கள் வாங்கும் நிலை இல்லை. இதனால் மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கு வியாபாரிகள் செல்கின்றனர். இதனால் நகர்பகுதியில் அனைத்து வியாபாரங்களும் பாதித்துள்ளது. பழைய முறையில் வாகனங்கள் சிக்னலில் நின்ற செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிரமங்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.
ரம்யா, உதவி கோட்ட பொறியாளர், தேசிய நெடுஞ்சாலைத்துறை. தேனி : வாகனங்கள் சிக்னலில் நிற்காமல், போக்குவரத்து நெரிசல் இன்றி செல்ல முன்னோட்டமாக ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை நடைமுறைபடுத்த ஓராண்டுகளாக திட்டமிடப்பட்டது. சாலைபாதுகாப்பு குழு மூலம் முடிவு செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றி அடுத்த பாதுகாப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.