வீரப்ப நாயக்கன் குளத்தில் தண்ணீர் நிரப்ப விவசாயிகள் வலியுறுத்தல்
கம்பம்: கம்பம் வீரப்ப நாயக்கன் குளத்தில் தண்ணீர் நிரப்பாததால் இக்கண்மாய் நீரை நம்பி 500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி முல்லைப் பெரியாறு அணை பாசனத்தில் நடைபெறுகிறது. இதுதவிர கம்பம் வீரப்ப நாயக்கன் குளம், ஒட்டு உடப்படி குளங்கள், உத்தமபாளையம் தாமரை குளம், குப்பி செட்டிகுளம் , சின்னமனுார் கருங்கட்டான் குளம், செங்குளம், உடைய குளம் போன்ற பல கண்மாய் பாசனங்களும் உள்ளன.கம்பத்தில் வீரப்ப நாயக்கன் குளத்தில் பாசன பகுதியாக 500 ஏக்கர் வரை தற்போது நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடவு செய்து இரண்டு மாதங்களை நெருங்குவதால் தண்ணீர் தேவைப்படும் . அணையிலிருந்து - தேவையான அளவு தண்ணீர் வாய்க்காலில் விடப்படுகிறது . ஆனால் என்ன காரணத்திற்காகவோ வீரப்ப நாயக்கன் குளத்தில் தண்ணீரை தேக்காமல் வைத்துள்ளனர். இதனால் சுமார் 500 ஏக்கர் நெல் பயிர் பாதிப்படையும் நிலையில் உள்ளது என விவசாயிகள் புலம்புகின்றனர்.இது தொடர்பாக உத்தமபாளையம் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன் கூறுகையில், 'எதற்காக தண்ணீர் நிரப்பாமல் உள்ளனர்' என தெரியவில்லை. அதிகாரிகளிடம் கேட்டு கூறுகிறேன்.', என்றார்.விவசாயிகள் சங்கச் செயலாளர் சுகுமாறன் கூறுகையில், 'வாய்க்கால், மடைகள் பராமரிப்பு செய்யாததால் தண்ணீர் வீணாகி விடுகிறது. இதனால் குளத்திற்கு தண்ணீர் ஏற்றுவது சிரமமாக உள்ளது. பராமரிப்பு பணிகளை விவசாய சங்கம் ஒரளவிற்கு தான் செய்ய முடியும். எல்லா பணிகளையும் நாங்கள் எவ்வாறு செய்வது.' என, தெரிவித்தனர்.