குடிநீர் குழாய் அமைப்பதற்காக பேவர் பிளாக் ரோடு சேதம்
கூடலுார் : கூடலுாரில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பேவர் பிளாக் ரோட்டில் பள்ளம் தோண்டி, பணிகள் முடிவடைந்து பல நாட்களாகியும் சீரமைக்காததால் விபத்து அபாயம் உள்ளது.கூடலுார் காமாட்சியம்மன் கோயில் குறுக்குத் தெரு, நடுத்தெரு, சிட்டப்பகவுடர் தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதற்காக தெருவில் பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக்கை அகற்றி அனைத்து தெருக்களிலும் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் தோண்டப்பட்ட பள்ளத்தில் பேவர் பிளாக் வைத்து சீரமைக்க நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. தெரு ஓரங்களில் குவிந்து கிடக்கும் கற்களால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் கார், ஜீப் ஆகியவைகள் செல்ல முடியவில்லை.குடிநீர் குழாய் பதிப்பதற்கும் பள்ளம் தோண்டுவதற்கும் அதை சீரமைப்பதற்கும் உண்டான செலவுத் தொகையை இணைப்புதாரர்களிடம் இருந்து நகராட்சி நிர்வாகம் பெற்றுக்கொள்கிறது. இருந்தபோதிலும் சீரமைப்பு பணிகள் செய்யாமல் ஏராளமான தெருக்களில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் குவிந்து கிடக்கிறது.