மருந்தாளுனர் பணியிடங்கள் காலி மருந்து, மாத்திரை வினியோகத்தில் சிக்கல்
கம்பம்: தேனி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் வினியோகத்தில் சிக்கல் எழுந்துள்ளது.தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி,பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி , சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய ஊர்களில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் கம்பத்திற்கு 4., உத்தமபாளையத்திற்கு 4, போடிக்கு 4, சின்னமனூர் ஒன்று, ஆண்டிபட்டிக்கு 2, பெரியகுளத்திற்கு 13 என்ற எண்ணிக்கையில் மருந்தாளுனர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.மருந்தாளுனர் பணியிடம் காலியாக இருப்பதால் மருந்து, மாத்திரைகள் வழங்க முடியாமல் திணறுகின்றனர். ஒவ்வொரு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட அளவு மருந்தாளுனர் பணியிடங்கள் இல்லாமல், பல பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணிகள் தேக்கநிலை உள்ளது. குறிப்பாக மருந்து மாத்திரைகள் வழங்கும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. உத்தமபாளையம் தலைமை மருந்தாளுனர் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பதவி உயர்வில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கும் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அனுமதிக்கப்பட்ட அளவு மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப நலப்பணிகள் இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.