| ADDED : ஜூன் 14, 2024 02:51 AM
தேனி:''காலிப்பணியிடங்களை நிரப்பாவிட்டால் சமையலர், உதவியாளர் இல்லாத மையங்களின் சாவியை ஜூலை இறுதியில் பி.டி.ஓ., அல்லது நகராட்சி கமிஷனர்களிடம் ஒப்படைக்க உள்ளோம்,'' என, தேனியில் சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் நுார்ஜஹான் கூறினார்.அவர் கூறியதாவது: ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என மூவர் இருக்க வேண்டும். பல இடங்களில் சமையலர், உதவியாளர் இல்லை. அருகில் உள்ள மையங்களில் இருப்பவர்கள் சில மையங்களை கூடுதலாக கவனிக்கின்றனர். அமைப்பாளர்கள் 4 அல்லது 5 மையங்களை கூடுதலாக சேர்த்து கவனிக்கின்றனர். தமிழகம் முழுவதும் சத்துணவு திட்டத்தில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.சத்துணவு பணியாளர்கள் மூலம் காலை சிற்றுண்டி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பெண் ஊழியர்களுக்கு ஓராண்டு பிரசவக்கால விடுப்பு வழங்க வேண்டும்.சத்துணவு ஊழியர்களின் ஆண் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ரூ.6750 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூன் 14) ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஜூன் 26ல் கலெக்டர் அலுவலகங்கள் முன் பெருந்திரள் முறையீடு செய்து கலெக்டர்களிடம் மனு அளிக்க உள்ளோம். காலிப்பணியிடங்களை நிரப்பாதபட்சத்தில் ஜூலை இறுதியில் சமையலர், உதவியாளர் இல்லாத மையங்களை பூட்டி சாவியை பி.டி.ஓ.க்கள், நகராட்சி, மாநகராட்சி கமிஷனர்களிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றார்.