உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 10ம் வகுப்பில் துணைத்தேர்வு எழுதுவோர் 1689 பேர்: கணித தேர்வில் 823 பேர் பங்கேற்கின்றனர்

10ம் வகுப்பில் துணைத்தேர்வு எழுதுவோர் 1689 பேர்: கணித தேர்வில் 823 பேர் பங்கேற்கின்றனர்

தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசுப்பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன், ஜூலையில் துணைத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சியடைபவர்களும் பள்ளிகள், கல்லுாரிகளில் சேர்கின்றனர். பிளஸ் 2 துணைத்தேர்வுகள் முடிந்துள்ளன. நாளை (ஜூலை 4ல்) 10ம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வுகள் துவங்குகிறது. மாவட்டத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வை மாணவர்கள் 1130 பேர், மாணவிகள் 559 பேர் என 1689 பேர் எழுதுகின்றனர். இதில் அதிகபட்சமாக கணித தேர்வு எழுத 823 பேர், தமிழ் 360 பேர், சமூக அறிவியல் 295 பேர், அறிவியல் 287 பேர், ஆங்கிலம் 195 பேர் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஜூலை 4 முதல் 10 வரை நடக்கிறது.இத் தேர்வுகள் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி, போடி நாடார் மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி பழனியப்ப நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளிகளில் நடக்கிறது.பிளஸ் 1 துணைத்தேர்வுகள் எழுத மாணவர்கள் 815 பேர், மாணவிகள் 407 பேர் என மொத்தம் 1222 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுகள் ஜூலை 4 முதல் 11 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 6 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது.வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரிக்கை: மாவட்டத்தில் துணைத்தேர்வுகள் 14 மையங்களில் நடக்கிறது.இந்த துணைத்தேர்வு நடக்கும் போது பள்ளிகள் செயல்பட வாய்மொழி உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது தேர்வு எழுதுபவர்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தி, மீண்டும் தோல்வியடைய காரணமாகிவிடும். எனவே, தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தேர்வு நேரத்தில் விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ