பெங்களூரு பயிற்சிக்கு 20 விவசாயிகள் தேர்வு
தேனி, : பெங்களூருவில் 5 நாட்கள் நடக்க உள்ள வேளாண் பயிற்சிக்கு பெரியகுளம் வட்டாரத்தில் இருந்து 20 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பிற மாநிலங்களில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள ஆண்டுதோறும் விவசாயிகள் வெளி மாநிலங்களுக்கு 'அட்மா' திட்டத்தில் அழைத்து செல்லப்படுகின்றனர். மாவட்டத்தில் இருந்து இந்தாண்டு 100 விவசாயிகள் அழைத்து செல்ல உள்ளனர். பெரியகுளம் வட்டாரத்தில் இருந்து 20 விவசாயிகள் அக்.14-18 வரை பெங்களூரு செல்கின்றனர். அங்கு உள்ள ஐ.ஏ.எச்.ஆர்., எனப்படும் கர்நாடக அரசு தோட்டக்கலை பல்கலையில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி, நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அதே பகுதியில் முன்னோடி விவசாயிகள் பண்ணைகளுக்கு அழைத்து செல்பட்டு நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளதாக வேளாண் துறையினர் கூறினர்.