உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காலியாக உள்ள 2000 இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்; தொற்று நோய் ஒழிப்பு, தடுப்புப் பணிகளில் தொய்வு

காலியாக உள்ள 2000 இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள்; தொற்று நோய் ஒழிப்பு, தடுப்புப் பணிகளில் தொய்வு

தேனி: ''மாநில மக்கள் நல்வாழ்வுத்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 2 ஆயிரம் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பாததால் டெங்கு, சிக்குன்குனியா நோய் ஒழிப்பு மற்றும் தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.'' என, சுகாதார ஆய்வாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் 2230 முதல் நிலை சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் 1800 பேர் பணிபுரிகின்றனர். 430 இடங்கள் காலியாக உள்ளன. இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் 2000 உள்ளன. இவற்றில் ஒரு இடம் கூட நிரப்பப்படாமல் முழுதும் காலியாக உள்ளன. இதனால் பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் டெங்கு, சிக்குன்குனியா உட்பட 10க்கும் மேற்பட்ட நோய் பாதிப்புகளுக்கான தடுப்பு, ஒழிப்புப் பணிகளை முன்னெடுப்பதிலும், தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் களப்பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் ராஜா கூறியதாவது: பிளஸ் 2 முடித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு காந்திகிராமம் உள்ளிட்ட 14 கல்வி நிறுவனங்களில் ஓராண்டு சுகாதார ஆய்வாளர் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு இங்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. தற்போது ஓராண்டு பயிற்சி 2 ஆண்டுகளாக மாற்றப்பட்டு தனியார் கல்லுாரிகளில் வழங்கப்படுகிறது. ஆனால் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை அரசு நிரப்பவில்லை. எங்களின் தொடர் கோரிக்கையை ஏற்று ஒருவாரத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளிடப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வராவிடில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ