மகளிர் உரிமைத்தொகை கோரி 23,556 மனுக்கள்
தேனி; மாவட்டத்தில் உங் களுடன் ஸ்டாலின் முதற்கட்ட முகாமில் மகளிர் உரிமைத்தொகை கோரி 23,556 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் ஜூலை 15ல் துவங்கியது. இந்த முகாமில் அனைத்து அரசு துறைகளுக்கும் மனுக்கள் புகார்கள் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் என பிரிக்கப்பட்டு முகாம்கள் நடந்தன. ஜூலை 15 முதல் ஆக., 14 வரை முதற்கட்டமாக 74 முகாம்கள் நடந்துள்ளன. இந்த முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை கோரி 23,556 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது தவிர பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைபட்டா, மின் இணைப்பு, புதிய ரேஷன்கார்டு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 12,783 பேர் மனு அளித்தனர். முதற்கட்ட முகாமில் மொத்தம் 36,339 பேர் மனு வழங்கி உள்ளனர். மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட இரண்டாம் கட்ட முகாம்கள் ஆக.,19 முதல் செப்., 12 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 90 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்து உள்ளனர்.