எறும்பு தின்னி செதில்கள் வைத்திருந்த 5 பேர் கைது
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே தடை செய்யப்பட்ட எறும்பு தின்னியின் செதில்கள் வைத்திருந்த 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் மதுரை மண்டல கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் திருச்சி வனக்காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆண்டிபட்டி, ஏத்தக்கோவில் பகுதியில் வனத்துறை குழுவினர் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்பகுதியில் மொட்டையன் கரடு என்ற இடத்தில் சந்தேகப்படும்படி வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்ததில் 1.100 கிலோ எடையிலான எறும்பு தின்னியின் செதில்களை வைத்திருந்தனர். விசாரணையில் பிடிபட்ட அவர்கள் தொட்டப்ப நாயக்கனூரை சேர்ந்த மொட்டையாண்டி 65, ஏத்தக்கோவில் ராஜு 44, சின்னக் கருப்பன் 55, அடைக்கம்பட்டி வினித் 25, பொன்னம்மாள்பட்டி முருகேசன் 28, என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த வனத்துறையினர் எறும்பு தின்னியின் செதில்களை பறிமுதல் செய்தனர்.