தங்கும் விடுதியில் மோதல்; சுற்றுலா பயணிகள் 6 பேர் காயம்
மூணாறு : ராமக்கல்மேட்டில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தகராறில் சுற்றுலா பயணிகள் ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர்.இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராமக்கல்மேடு முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 60 பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் இரவு அறை எடுத்து தங்கினர்.அங்கு அறை ஒன்றில் 'பேன்' ஓடவில்லை. அதனை குறித்து கேட்ட போது சுற்றுலா பயணிகள், விடுதி ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் பலமாக மோதிக் கொண்டனர். அதில் சுற்றுலா பயணிகள் அப்துல்சுக்கூர் 38, ஜீனத் 52, ஷிஹாப்ஹம்ஷா 39, ஷீபா 13, ஜீனத் 56, ஷெய்பூனிஸ் 60, ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் களமசேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.