நாடுகாணியில் பழுதாகி நின்ற லாரி 11 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்: கூடலுார் அருகே நாடுகாணியில் சாலையில் லாரி பழுதாகி நின்றதால், மூன்று மாநிலங்கள் இடையே, 11 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், கூடலுார் நாடுகாணியிலிருந்து, நீலகிரி --- கேரளாவை இணைக்கும் நிலம்பூர் சாலை பிரிந்து செல்கிறது.இச்சாலை, தமிழக, கேரளா, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இவ்வழியாக, கேரளா, -கர்நாடகா இடையே அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.கேரளா மாநிலம், மலப்புரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு, கர்நாடகா மாநிலம், மாண்டியாவுக்கு தேங்காய் ஏற்றிய லாரி புறப்பட்டது.நள்ளிரவு, 12:00 மணியளவில் கேரளா எல்லையை கடந்து, கூடலுார் நோக்கி வந்த லாரி, நாடுகாணியில் பழுதாகி சாலை நடுவே நின்றது.இலகுரக வாகனங்கள் கூட செல்ல வழியில்லாததால், தமிழகம், கேரளா, கர்நாடகா இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தேவாலா போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரசு பஸ், சுற்றுலா பஸ்கள், கனரக வாகனங்கள் சாலையின் இருபுறம் அணிவகுத்து நின்றது.பழுதடைந்த லாரியில் இருந்த தேங்காய்கள் வேறு லாரிக்கு மாற்றப்பட்டது. நேற்று காலை, 11:00 மணிக்கு போக்குவரத்து சீரானது. ஓட்டுநர்கள் கூறுகையில், 'இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி, சாலையில் நின்று போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்க வேண்டும்' என்றனர்.