கடனை வசூலிக்க சென்ற பெண்ணை துடைப்பத்தில் அடித்த குழு பெண்கள்
தேவதானப்பட்டி:தேவதானப்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழு கடனை வசூலிக்க சென்ற டிரஸ்ட் பணியாளரை, துடைப்பத்தால் தாக்கிய பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி மேட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரேமா, 39; ரூரல் இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்டில் பணிபுரிகிறார். டிரஸ்ட் மூலம் 40 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளில் கடன் வாங்கி கொடுத்து, பணம் வசூல் செய்யும் பணியை செய்கிறார். தேவதானப்பட்டியை சேர்ந்த மணிமேகலை, 38, என்பவர், கண்ணாத்தாள் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ளார். இக்குழுவின், 10 நபர்களுக்கு டிரஸ்ட் மூலம் ஜி.தும்பலப்பட்டி கனரா வங்கியில் தலா, 60,000 வீதம், 6 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. மாதம், 3,000 வீதம், 10 பேரும், 30,000 ரூபாய் செலுத்த தீர்மானிக்கப் பட்டது. ஆனால், முதல் மாதமே தவணையை குறைவாக செலுத்தினர். இதனால், 10 பேரின் கணக்கை, டிரஸ்ட் நிர்வாகம் முடக்கியது. குழு கடனை வசூலிக்க சென்ற பிரேமாவை, மணிமேகலை துடைப்பம் மற்றும் கையால் அடித்தும், ஆடைகளை கிழித்தும் கொலை மிரட்டல் விடுத்தார். காயமுற்ற பிரேமா, பெரியகுள ம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார், மணிமேகலை மீது வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.