மனஅழுத்தத்தை குறைக்க உதவும் மாடித்தோட்டம்
''மாடித் தோட்டங்கள் அமைத்து பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டால், அலுவலகத்தில் வேலைப் பழு, அதனால் ஏற்படும் மன அழுத்தம், கோபத்தை குறைக்க முடியும்.'' என்கின்றனர், கம்பத்தை சேர்ந்த வெங்கட்குமார் -- செல்வராணி தம்பதி.கம்பம் நாட்டுக்கல் தெருவில் வசிக்கும் இத்தம்பதி தங்கள் வீட்டை ஒரு குட்டித் தோட்டமாகவே மாற்றி எளிதாக பராமரித்து வருகின்றனர். சுற்றுப் புறச்சூழல் மாசுபட்டுள்ளது. சுவாசிக்க சுத்தமான காற்று கிடைக்கவில்லை. சாலைகள் விரிவாக்கம் என்ற பெயரில் மரங்கள் வெட்டப்பட்டு கொண்டு இருக்கின்றன. பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பால் மண் வளம் பாதிக்கப்பட்டு உள்ளது. கம்பம் மலையடிவாரத்தில் அமைந்துள்ள போதும், சுற்றுப்புறச்சூழல் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. ஆரம்பத்தில் விளையாட்டாக பூச்செடிகளை மாடியில் வளர்க்க ஆரம்பித்த இத்தம்பதியினர், தற்போது அதை ஒரு வேலையாக செய்ய துவங்கி உள்ளனர். மாடி முழுவதும் மணம் பரப்பும் மலர்கள் , மூலிகைச் செடிகள், அழகிற்காக வளர்க்கப்படும் செடிகள் என, வரிசையாக உள்ளன. அத்துடன் ஜன்னல், மாடிப் படிகள், சுவர்களிலும் ஆணி அடித்து தொட்டி அமைத்து மலர்ச் செடிகள் வளர்க்கின்றனர். வித விதமான கற்றாழை, கள்ளி செடியில் வித்தியாசமான ரகங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை கவரும் வகையில் வளர்க்கப்பட்டு உள்ளன. மேலும் வீட்டில் படுக்கையறை, வரவேற்பறை என கிடைக்கும் இடங்களில் எல்லாம் மலர்கள், மூலிகைச் செடிகள் வளர்க்கப்பட்டு உள்ளன. மாசில்லா சூழல்
வெங்கட்குமார், இயற்கை ஆர்வலர், கம்பம் : வெளியில் சென்று வீடு திரும்பும் போது எப்போதும் ஒரு சோர்வுடன் கூடிய வெறுமை இருக்கும். ஆரம்பத்தில் வீட்டில் உள்ளவர்களிடம் அந்த கோபத்தோடு பேசுவேன். மாடியில் பூந்தொட்டிகள் சிலவற்றை வாங்கி வைத்து, அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சுவது, அவற்றை பராமரிக்க துவங்கியவுடன் அந்த கோபம் பறந்து விட்டது. மனது இதமாகி எளிதானது. மலர்களும், மூலிகைச் செடிகளும் உயிர் உள்ளவை. அவைகள் நம்முடன் பேசும். ஆத்மார்த்த உள்ளன்புடன் மலர்களை நேசிக்க தொடங்கி, அவற்றை பராமரிக்க துவங்கினால், அவைகள் நம்முடன் பேசும். அதன் மொழி தனித்துவமானது. இரவில் துாங்கும் போது நல்ல ஆக்சிஜன் கிடைக்க வீட்டின் படுக்கையறையில் கற்றாழை, லாவெண்டர், ஸ்நேக் பிளாண்ட், பொத்தேஸ் வளர்க்கின்றோம். இந்நகரை மாசில்லா நகரமாக மாற்ற, முதலில் நமது நகரை, நமது வீட்டை மாசில்லாததாக மாற்ற வேண்டும். அதற்காகவே இந்த மாடித் தோட்டம் அமைத்தேன்., என்றார். கோபம் குறைய எளியவழி
செல்வராணி, குடும்பத் தலைவி : முதலில் துளசி, துாதுவளை, வில்வம் போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை வளர்க்க ஆரம்பித்தேன். எனது கணவர் மலர் செடிகளை வளர்க்கத் துவங்கினார். எங்களுக்குள் மாடித் தோட்டம் அமைப்பதில் போட்டி ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து தற்போது 50க்கும் மேற்பட்ட மூலிகை, மலர்கள், காய்கறி செடிகளை வளர்த்து வருகிறோம். இடமில்லை என்பதால் ஜன்னல், மாடிப்படி, சுவர்களிலும் ஆணி அடித்து அதிலும் வளர்க்கிறோம். படுக்கை அறை, வரவேற்பறையில் கற்றாழை, அழகு பூச் செடிகள் அமைத்துள்ளோம். குறிப்பாக படுக்கை அறையில் சுவாசிக்க ஆக்சிஜன் தரும் தாவரங்களை வைத்துள்ளோம். இதன் மூலம் வீட்டில் எப்போதும் ஒரு நல்ல காற்றோற்றம் உள்ளது. சுவாசிக்க நல்ல காற்று, சிறு சிறு உடல் உபாதைகளுக்கு மூலிகைகள், வீட்டு தேவைக்கேற்ப காய்கறிகள் கிடைக்கின்றன. குறிப்பாக மன அழுத்தத்தின் காரணமாக கோபம் வரும் போது பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினால் கோபம் குறையும். இயற்கையாக வாழ, இயற்கையுடன் இணைந்து நிற்க கற்றுக் கொள்ள வேண்டும். கம்பம் நகரை மாசில்லாதாக மாற்ற ஒவ்வொருவரும் இது போன்று வீடுகளில் தோட்டம் அமைக்கலாம்., என்றார்.