சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிய பயன் இல்லாத பூ மார்க்கெட்
தேனி : தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் ரூ.28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பூமார்க்கெட் பயன்பாட்டின்றி உள்ளதால் சமூக விரோதிகள் புகலிடமாகவும் மாறி உள்ளது. தேனியில் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட் சிலஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. தற்போது அதே பகுதியில் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பூமார்க்கெட் கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் 3வது பிளாட்பாரம் அருகே ரூ. 21 லட்சம் செலவில் 41 கடைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரூ.9.50 லட்சம் செலவில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. இந்த கடைகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்க வில்லை. இதனால் பல மாதங்களாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. தற்போது இந்த பூமார்க்கெட் பயன்பாட்டில் இல்லாததால் இதனை திறந்த வெளி மதுபாராக சிலர் பயன்படுத்துகின்றனர். இது தவிர சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன. கடைகளுக்கு மின் இணைப்புகள் வழங்கி பூ மார்கெட்டை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேனி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.