ஆடிப்பண்டிகையால் கிராமங்களில் நாட்டுக்கோழிகளுக்கு தட்டுப்பாடு
ஆண்டிபட்டி; ஆடிப் பண்டிகையை முன்னிட்டு கிராமங்களில் நாட்டு ரக கோழிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. விலை உயர்வால் கறிக்கோழி கடைகளில், நாட்டு ரக கோழிக்கறி விற்பனையை தவிர்க்கின்றனர்.ஆண்டிபட்டி பகுதியில் கிராமங்களில் விவசாயிகள் நாட்டுக் கோழிகள் வளர்ப்பை உப தொழிலாக செய்து வருகின்றனர். விவசாய நிலத்தை ஒட்டி உள்ள வீடுகள், பண்ணைகள் ஆடு, மாடு கொட்டில்களில் 10 முதல் 20 கோழிகள் வரை வளர்க்கின்றனர். நாட்டு ரக கோழி முட்டை, இறைச்சியில் சத்து அதிகம் என்பதால் பலரும் இதனை விரும்புகின்றனர். கிராமங்களில் வளர்க்கப்படும் கோழிகளை பெரும்பாலும் விற்பனை செய்யாமல் சொந்தம் மற்றும் உள்ளூர் தேவைக்கே பயன்படுத்துகின்றனர். இதனால் நகர் பகுதியில் நாட்டு ரக கோழிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.கோழிக்கறி விற்பனையாளர்கள் கூறியதாவது: தற்போது பிராய்லர் கோழிக்கறி கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்பனை ஆகிறது. ஆட்டுக்கறி விலை அதிகம் என்பதால் பலரும் பிராய்லர் கோழிக்கறி பயன்படுத்த துவங்கிவிட்டனர்.நாட்டுக் கோழிக்கறி விற்பனைக்கு தனியாக மேற்கொள்ள முடியாது. கோழிகள் தேவையான அளவு கிடைக்காது. கோழி வளர்பாளர்களே கிலோ ரூ.600 வரை விலை நிர்ணயம் செய்கின்றனர். கடைகளில் நாட்டுக்கோழிக்கறி அடக்க விலை ரூ.700 முதல் 800 வரை ஆகிறது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியாது. ஆடி பண்டிகையில் அசைவ உணவில் நாட்டு ரக கோழிக்கறிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.