மாவட்டத்தில் 45 ஆயிரம் பேருக்கு வீடு தேடி ரேஷன் வழங்க ஏற்பாடு
தேனி: மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் 45ஆயிரம் பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்க உள்ளதாக கூட்டுறவுத்துறையினர் தெரிவித்தனர். மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் சுமார் 510க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. அதே போல் மாவட்டத்தில் 4.31 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் குடும்ப தலைவர், தலைவியாக உள்ள ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கார்டுகள் கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தாலுகா வாரியாக ஆண்டிபட்டி 8 ஆயிரம், பெரியகுளம் 5 ஆயிரம், தேனி 6100, போடி 7550, உத்தமபாளையம் 17,670 என மொத்தம் 45,320 ரேஷன் கார்டுகள் இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சில கடைகள் தேர்வு செய்து ஆக., முதல்வாரத்தில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது.