சைபர் குற்ற அடிமைகளாக பொறியியல் மாணவர்கள் சிக்கி கொள்ளக்கூடாது ஏ.டி.எஸ்.பி., எச்சரிக்கை
தேனி:தெற்கு ஆசிய நாடுகளில் சைபர் குற்ற அடிமைகளாக பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இணையவெளி பயன்பாட்டை எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும்,'' என, தேனி சைபர் கிரைம் தடுப்புப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்ஸ்சாண்டர் தெரிவித்தார். தேனியில் நடந்த இணையவெளி குற்றத்தடுப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்வில் அவர் பேசியதாவது: வேலை தருவதாக படித்த இளைஞர்கள், பொறியியல் கல்லுாரி முடித்த இளம்பெண்கள், இளைஞர்களை குறி வைத்து விளம்பரம் செய்து, அவர்களை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்று சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுத்தும் நிலை அதிகரித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பொறியியல் மாணவர்களை சைபர் குற்ற அடிமைகள் என்கிறோம். இதில் பாதிக்கப்பட்ட 29 ஆயிரம் இந்தியர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். கம்போடியா சென்ற 5 ஆயிரம் பேர் நாடு திரும்பாத காரணத்தை கண்டறிந்த போது தான் அவர்கள் சைபர் அடிமைகளாக மாற்றப்பட்டுள்ளதை சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக 2022ல் ஜனவரி முதல் 2024 மே வரை விசிட்டிங் விசா மூலம் கம்போடியா, தாய்லாந்து, மியான்மர், வியட்நாம் ஆகிய தென்கிழக்கு நாடுகளுக்கு சென்றவர்கள் திரும்ப வில்லை என தெரிய வந்துள்ளது. கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து சென்று திரும்பிய 47 பேரின் வீடுகளுக்கே சென்று உண்மைதன்மை அறிந்து அறிக்கை சமர்பிக்கப் பட்டுள்ளது. இதனால் பொறியியல் மாணவர்கள், பொது மக்கள் இணையவெளி பயன்பாட்டை மிக கவனமாக கையாண்டு, சைபர் குற்ற அடிமைகளாக சிக்காமல் தற்காத்துக் கொள்வது அவசியம் என்றார்.