நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே விரதம் துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
தேனி: சபரிமலையில் கடந்தாண்டு கூட்ட நெரிசலில் சிக்கி தவித்ததால், இந்தாண்டு அதனை தவிர்க்கும் வகையில் ஐயப்ப பக்தர்கள் முன்கூட்டியே விரதம் துவக்கிய நிலையில், இம்மாத நடை திறப்பிற்கு செல்ல உள்ளோம் என தெரிவித்தனர்.சபரிமலையில் மண்டல பூஜைக்காக நவம்பரில் நடை திறக்கப்பட்டு டிச., இறுதியில் நடை அடைக்கப்படும். அதே போல் மகர விளக்கு பூஜைக்காக டிச., இறுதியில் நடை திறக்கப்பட்டு ஜன., இறுதியில் நடை அடைக்கப்படும். இந்த நாட்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வர். சுவாமி தரிசனம் செய்ய 2021 முதல் ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.சபரிமலையில் கடந்தாண்டு பக்தர்களை அறைகளில் தங்க வைத்து பின் தரிசனம் செய்யும் புதிய நடைமுறை மண்டல பூஜை காலத்தில் அமல்படுத்தப்பட்டது. அதிக அளவிலான கூட்டம், அறைகளில் அதிக நேரம் அடைக்கப்பட்டு இருந்ததால், சுவாமி பார்க்க இருநாட்கள் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. சிலர் பம்பா, எருமேலி சாஸ்தா கோயில்களில் இருமுடி காணிக்கை செலுத்தி திரும்பினர்.இந்தாண்டு தினமும் 80 ஆயிரம் பேர் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடந்தாண்டை போல் கூட்டத்தில் சிக்கி சிரமப்படாமல் இருக்க பக்தர்கள் சிலர் இப்போதே மாலை அணிந்து விரதம் துவங்கி உள்ளனர். சபரிமலையில் மாத பூஜைக்காக அக்.,16 மாலை முதல் அக்.,21 வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதே போல் அக்.30, 31ல் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது.