நீர் மின்நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மூணாறு: பள்ளிவாசல் நீர்மின் நிலையத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.மூணாறு அருகில் உள்ள பள்ளிவாசல் நீர்மின் நிலையம் 1940ல் பயன்பாட்டிற்கு வந்தது. இது கேரளாவில் முதல் நீர்மின் நிலையமாகும். அங்கு 37.5 மெகாவாட் மின்உற்பத்தி நடக்கிறது. இந்த மின்நிலையத்திலும், அருகில் உள்ள இரண்டு வீடுகளிலும் வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சார்பிலான தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் நேற்று முன்தினம் மாலை மிரட்டல் விடுத்தார். இடுக்கியைச் சேர்ந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், போலீஸ் மோப்ப நாயின் உதவியுடன் நீர்மின் நிலையம், வீடுகள் ஆகியவற்றில் தீவிரமாக சோதனையிட்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் வெறும் புரளி என தெரியவந்தது.இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரித்தபோது, அவர் திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த மணிகுமார் என தெரியவந்தது. நீர் மின்நிலையத்தில் முன்பு பணியாற்றிய ஊழியர் ஒருவரின் தூண்டுதல்படி மணிகுமார் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக தெரியவந்ததால் போலீசார் விசாரிக்கின்றனர்.