காய்ச்சலில் சிறுவன் பலி: உடலை 13 கி.மீ., துாரம் சுமந்து சென்ற அவலம்
மூணாறு : இடமலைகுடி ஊராட்சியில் காய்ச்சலால் பாதித்து பலியான கார்த்திக் 6, என்ற சிறுவனின் உடலை 13 கி.மீ., தூரம் சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்ற அவலநிலை ஏற்பட்டது. மூணாறு அருகே அடர்ந்த வனத்தில் உள்ள இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். அங்கு ரோடு, மருத்துவம் உட்பட அடிப்படை வசதிகள் மிகவும் குறைவு. அந்த ஊராட்சியில் காய்ச்சல், வயிற்று போக்கு உட்பட பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. அங்குள்ள கூடலார்குடியைச் சேர்ந்த மூர்த்தி, உஷா தம்பதியினரின் மகன் கார்த்திக் 6, காய்ச்சல், வயிற்று போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உடல் நிலை மோசமானது. அப்பகுதியினர் ஆக.22ல் சிறுவனை ' டோலி' கட்டி மாங்குளம் அருகே ஆனக்குளம் பகுதிக்கு சுமந்து சென்றனர். அங்கிருந்து வாகனம் மூலம் மாலையில் அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வசிக்கும் பகுதிக்கு வாகனம் செல்லும் வகையில் ரோடு வசதி இல்லாததால் 13 கி.மீ., தூரம் உடலை சுமந்து சென்றனர். இது போன்று துயர சம்பவங்களை மலைவாழ் மக்கள் அடிக்கடி அனுபவித்து வருகின்ற போதும், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு முன்வருவதில்லை.