மழையால் செங்கல் உற்பத்தி நிறுத்தம்
கம்பம்: தொடர் சாரல் மழையால் செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் விலை உயரத் துவங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கம்பம் பகுதியில் ஒவ்வொரு ஊரிலும் செங்கல் காளவாசல்கள் உள்ளன. கம்பத்தில் 30 க்கும் மேற்பட்ட காளவாசல்கள் உள்ளன. கல் அறுப்பதற்கு தற்போது இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சாரல் மழை காரணமாக பெரும்பாலன காளவாசல்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால் செங்கல் விலை உயரத் துவங்கி உள்ளது. ஆயிரம் கல் ரூ.6800 வரை விற்கப்படுகிறது.காளவாசல் உரிமையாளர் கிருஷ்ணன் கூறுகையில், 'தொழிலாளர்கள் மூலம் அறுக்கும் போது மூன்று வித மண் கலக்கப்படும். மழை பெய்தாலும் பாதிப்பு இருக்காது. தற்போது இயந்திர அறுவை என்பதால் ஒரு மண் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் மழை லேசாக பெய்தாலும் கல் சேதமடைகிறது. எனவே உற்பத்தியை நிறுத்தியுள்ளோம்,' என்கிறார்.