புதர்மண்டிய 58ம் கால்வாய்: பராமரிப்பு செய்ய வலியுறுத்தல்
ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58 கிராமங்களின் பாசனத்திற்கு நீர் செல்லும் 58ம் கால்வாய் பராமரிப்பின்றி புதர் மண்டி உள்ளது.வைகை அணை நீர்மட்டம் 67 அடிக்கும் அதிகமாகும் போது, அணையின் நீர் இருப்பு, நீர் வரத்தை பொறுத்து 58ம் கால்வாயில்பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.கால்வாயில் செல்லும் நீரால் ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். கடந்த ஆண்டு அணையில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லாததால் 58 ம் கால்வாய் வழியாக நீர் திறக்கப்படவில்லை. இதனால் நீர்வரத்து இல்லாததால் புதர் மண்டியது. கால்வாய் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கிறது. இன்னும் சில மாதங்களில் துவங்கும் வடகிழக்கு பருவமழையால் வைகை அணை நீர்மட்டம் முழு அளவான 71 அடிக்கு உயரும் வாய்ப்புள்ளது.58ம் கால்வாய் வழியாக திறக்கப்படும் நீர் கால்வாய் செல்லும் கிராமங்களுக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேரும் விதமாக கால்வாயை தூர்வாரி பராமரிப்பு செய்ய நீர்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.