தர்ணா நடத்திய பி.எம்.எஸ்., பா.ஜ.,வினர் மீது வழக்கு
மூணாறு: போலீஸ் ஸ்டேஷன் முன்பு போராட்டம் நடத்தியது தொடர்பாக பா.ஜ., மற்றும் பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தை சேர்ந்த 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். மூணாறில், மும்பையைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஜான்வியிடம் அக்.30ல் உள்ளூர் டாக்சி டிரைவர்கள் சிலர் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இச்சம்பவத்தில் மூணாறு போலீசார் மூன்று டிரைவர்களை கைது செய்த நிலையில், அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்தபட்ட டிரைவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், வழக்கை ரத்து செய்யுமாறும் வலியுறுத்தி பா.ஜ., மற்றும் பி.எம்.எஸ்., தொழிற்சங்கம் ஆகியோர் சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஊர்வலமும், போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. அது தொடர்பாக கலவரத்தை தூண்டுதல், அனுமதி இன்றி ஊர்வலம், போராட்டம் நடத்தியது ஆகிய பிரிவுகளில் பா.ஜ., மற்றும் பி.எம்.எஸ்., தொழிற்சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 25 பேர் மீது மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.