நீதிமன்ற வளாகத்தில் மரங்களை வெட்ட முயன்றவர் மீது வழக்கு
மூணாறு: தேவிகுளத்தில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட முயன்ற தொழிற்சங்க பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தேவிகுளம் மண்டல ஐ.என்.டி.யு.சி. தலைவராக பொறுப்பு வகிப்பவர் மைக்கிள்ராஜ். இவர், தேவிகுளம் முன்சீப் நீதிமன்றம் வளாகத்தில் உள்ள இரண்டு ' யூக்கலிப்டஸ்' மரங்களை இயந்திரம் மூலம் வெட்ட முயன்றார். அதனை அறிந்த நீதிமன்ற ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தேவிகுளம் போலீசார் மைக்கிள்ராஜிடம் விசாரித்தனர். தேவிகுளம் ஊராட்சியின் அனுமதியுடன் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் நடவடிக்கையாக மரங்களை வெட்ட முயன்றதாக தெரியவந்தது. எனினும் ஊராட்சியின் முடிவு உட்பட நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மரங்களை வெட்ட முயன்றதால் தேவிகுளம் போலீசார் மைக்கிள்ராஜ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.