சபரிமலையில் திருடுபோன அலைபேசிகள் தேனியில் மீட்பு
கம்பம்:சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சீசனில் திருட்டு, காணாமல் போன 102 அலைபேசிகளை, கம்பம், தேனி மற்றும் ஆந்திராவில் இருந்து கேரள போலீசார் மீட்டுள்ளனர்.சபரிமலையில் ஆண்டுதோறும் மகர விளக்கு ,மண்டல பூஜை சீசனில் பக்தர்களிடமிருந்து பணம், நகை, அலைபேசிகள் திருடு போவது, பக்தர்கள் தவற விடுவது நடக்கிறது. அந்த வகையில் கடந்த சீசனில் அலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் காணாமல் போனதாக பம்பை போலீசில் 230 புகார்கள் பதிவு செய்யப்பட்டது.இந்த அலைபேசிகளை சென்ட்ரல் எக்யூப்மெண்ட் ஐடன்டிடி ரிஜிஸ்தர் ( CEIR ) என்ற போர்டலை பயன்படுத்தி பம்பை போலீசார் செயல்பாட்டை தடை செய்தனர். அவ்வாறு பிளாக் செய்த அலைபேசிகளை மீண்டும் ஆன் செய்தவுடன் அலைபேசி நெட்ஒர்க் சேவை வழங்கும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மற்றும் புகார்தாரருக்கு அலைபேசியின் லொக்கேசனை தகவல் தெரிவிக்கும். அத் தகவலை தொடர்ந்து பம்பை போலீசார் 102 அலைபேசிகளை மீட்டனர்.இவை பெரும்பாலும் கம்பம், தேனி மற்றும் ஆந்திர மாநிலத்தில் சில நகரங்களில் இருந்தும் மீட்டதாக தெரிவித்தனர். கீழே கிடந்தவற்றை எடுத்துவந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. கம்பம் பகுதியில் இது தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடத்த முடிவு செய்திருப்பதாக பத்தனம்திட்டா போலீசார் தெரிவித்தனர்.