சபரிமலை மகரஜோதி தரிசனம் இடுக்கியில் கலெக்டர் ஆய்வு
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கலெக்டர் விக்னேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார்.சபரிமலையில் மகரஜோதி தரிசனம் இன்று (ஜன.14) நடக்க உள்ள நிலையில், அதனை இடுக்கி மாவட்டத்தில் புல்மேடு, பருத்துபாறை, பாஞ்சாலிமேடு ஆகிய பகுதிகளில் இருந்து தரிசிக்கலாம். அப்பகுதிகளில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். இடுக்கி எஸ்.பி., விஷ்ணுபிரதீப், சப் கலெக்டர் அனுப்கார்க் உள்பட பலர் உடனிருந்தனர்.கலெக்டர் கூறியதாவது: மகரஜோதி தரிசன பாதுகாப்பிற்கு 8 டி.எஸ்.பி.க்கள், 19 இன்ஸ்பெக்டர்கள், 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மகரஜோதி தரிசனம் செய்யும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.எஸ்.பி., விஷ்ணுபிரதீப் கூறுகையில், மகரஜோதி தரிசனத்திற்கு பிறகு புல்மேட்டில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். குமுளி, பீர்மேடு, வண்டிபெரியாறு பகுதிகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்த தேனி போலீசாரின் உதவி கோரப்பட்டுள்ளது. கோழிக்காணம், புல்மேடு இடையே 365 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டனர்.குமுளி வழித்தடத்தில் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் கம்பம்மெட்டு வழியாக பக்தர்கள் கேரளாவுக்கு செல்லலாம். குமுளி வழியாக திரும்புவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. 'கெவி' பாதையில் வனத்தினுள் ஆபத்தான பகுதிகள் வழியாக செல்வதை வனம், போலீஸ் ஆகிய துறையினர் இணைந்து கண்காணித்து தடுக்க வேண்டும். பத்தினம்திட்டா வழியாக எக்கோ டூரிசம் பயணம் மகரஜோதி முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.புல்மேட்டில் பி.எஸ்.என். எல். சார்பில் தொலை தொடர்பு வசதி செய்யப்பட்டது. குமுளி, கோழிக்காணம் வழி தடத்தில் இன்று காலை 6:00 முதல் மாலை 4:00 மணி வரை 50 கேரள அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.