தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்
ஆண்டிபட்டி : தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் சம்பள பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி நேற்று 2ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு தனியார் ஏஜன்சி மூலம் 400க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்கின்றனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் வேலை செய்து வந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு பிடித்தம் போக ரூ.12,500 மாத சம்பளமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் பணியாளர்கள் அனைவரும் வேறொரு ஏஜன்சிக்கு மாற்றப்பட்டனர். புதிதாக வந்த ஏஜன்சி நிர்வாகம் ஒப்பந்த பணியாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரமாக சம்பளத்தை உயர்த்தி வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் மீண்டும் ரூ.12,500 மட்டுமே வழங்கப்பட்டதாக பணியாளர்கள் தெரிவித்தனர். கடந்த மூன்று மாதமாக வழங்கிய ரூ.15 ஆயிரம் சம்பளத்தை தொடர்ந்து வழங்க வலியுறுத்தி நேற்று முன்தினம் பணிக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரம் நடந்த போராட்டத்தில் போலீசார் தனியார் ஏஜன்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் வேலைக்கு திரும்பினர். இந்நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2ம் நாளாக ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம் செய்தனர். இதனால் மருத்துவமனையில் சுகாதாரம் உள்பட பல்வேறு பணிகள் பாதிப்படைந்தது. இதனை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை ஓரிரு நாட்களில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று போராட்டத்தை கைவிட்டு சில மணி நேரத்துக்குப் பின் மீண்டும் வேலைக்கு திரும்பினர்.