‛டிவிடெண்ட் வழங்காததால் கூட்டுறவு பணியாளர்கள் அதிருப்தி
தேனி: கூட்டுறவு பணியாளர்கள் சிக்கன நாணய சங்கத்தில் இருந்து (லாபத்தில் கிடைக்கும் பங்குத்தொகை) 'டிவிடெண்ட்' தொகை வழங்காததால் கூட்டுறவு பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தேனியில் கூட்டுறவு பணியாளர் சிக்கன நாணய சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தில் கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் மூலம் கூட்டுறவு பணியாளர்களுக்கு கடன்கள், நகைக்கடன் வழங்கப்படுகிறது. உறுப்பினர் சந்தா தொகையாக பணியாளர்கள் மாதந்தோறும் ரூ.200 செலுத்துகின்றனர். இதுதவிர பணியாளர்கள் கடன் பெறும் போது ஒரு லட்சத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை பங்குத் தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை, வட்டித்தொகை உள்ளிட்டவை சங்க லாபமாக கணக்கிடப்படுகிறது. இதனை வைத்து தீபாவளிக்கு முன் 'டிவிடெண்ட்' தொகையாக உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. கூட்டுறவு பணியாளர்கள் கூறியதாவது: சிக்கன நாணய சங்கத்தில் சுமார் 900 பேர் உறுப்பினர்களாக உள்ளோம். கடந்தாண்டு வரை தீபாவளிக்கு முன் உறுப்பினர்களுக்கு 'டிவிடெண்ட்' வழங்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு 'டிவிடெண்ட்' வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இதுபற்றி சங்கத்தினரிடம் கேட்டால் உரிய பதில் இல்லை. 'டிவிடெண்ட்' வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றனர்.