காய்கறி கழிவுகளை இயற்கை உரமாக்கி அசத்தல்; போடியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தம்பதியினர்
போடி சுப்புராஜ் நகரில் வசிக்கும் முத்துராமலிங்கம், ராஜேஸ்வரி தம்பதியினர் வீட்டில் காய்கறி கழிவுகளை வீணாக்காமல் மண் புழுக்களுடன் தொட்டியில் போட்டு மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்கும் நுட்பத்தை செயல்படுத்துகின்றனர். வீடு முழுக்க ஆக்சிஜன் தரும் மரங்கள், பூத்துக் குலுங்கும் பூச்செடிகள், மூலிகை செடிகள், அழகு செடிகள், பல்வகை மரங்கள் பராமரித்து வருகின்றனர். பசுமை தோட்டமாக மாறி உள்ள இவர்களது வீட்டில் நுழைவு வாயிலில் பூத்துக் குலுங்கும் பூக்கள், வெற்றிலை கொடிகள், விசிறி வாழை மரங்கள் வளர்ந்து வரவேற்கின்றன. இதனுடன் நறுமணம் கமழும் மல்லி, முல்லை, இட்லி பூக்கள். மூலிகை செடிகள், சப்போட்டா, மாதுளை, சீதா பழங்கள் நன்கு வளர்ந்துள்ளன. இங்குள்ள பூத்து குலுங்கும் வண்ண பூக்களில் தேனை குடிப்பதற்காக பட்டாம் பூச்சிகள் படையெடுப்பும், தேன்சிட்டு, குயில் உள்ளிட்ட பறவைகள் அவ்வப்போது ஓசைஎழுப்பி வந்து செல்வது மனதை இதமாக்குகின்றன. இந்த வீட்டு தோட்டத்தில் கற்பூரவள்ளி, கருந்துளசி, வெற்றிலை, கறிவேப்பிலை, மருதாணி, குப்பைமேனி உள்ளிட்ட மூலிகை செடிகள் உள்ளன. காய்கறியில் முருங்கை, பாகற்காய், பச்சை மிளகாய், மஞ்சள், சேமகிழங்கு, கீரைகளில் மிளகு தக்காளி, முருங்கை கீரை, தென்னை, முல்லை, நித்திய கல்யாணி, கல் வாழை, குரோட்டன்ஸ், கற்றாழை, வீட்டின் மதில் சுவர்களில் சிறிய அளவிலான தொட்டியில் வளர்ந்துள்ள அழகு செடிகள் வீட்டிற்கு அழகு சேர்க்கின்றன. இயற்கையோடு இணைந்த வாழ்வு முத்துராமலிங்கம், தொழில் முனைவர், போடி : சுற்றுச்சூழல் பாதிப்பால் சுத்தமான காற்று சுவாசிப்பது அவசியம். இதனால் முடிந்த வரை நாம் சுற்றுப்புறத்தை மரங்கள், செடிகள் நட்டு பாதுகாக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் வீட்டை சுற்றி இரண்டு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். எனவே, பசுமை போர்வை போர்த்தியது போல் வீட்டை சுற்றி செடிகள், மரங்கள், வண்ண மலர்கள் வளர்த்து வருகிறோம். மூலிகை செடிகள், கீரை வகைகள், கருவேப்பிலை, பழச்செடிகள் நட்டு பராமரிக்கின்றோம். சுத்தமான ஆக்சிஜன் கிடைப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. இயற்கையோடு இணைந்து வாழ்வதால் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. காய்கறி கழிவுளால் இயற்கை உரம் ராஜேஸ்வரி, குடும்பத் தலைவி, போடி : வீட்டில் பூத்துக் குலுங்கும் பூக்கள், வெற்றிலை, வாழை, அழகு செடிகள் உட்பட 50 மேற்பட்ட செடிகளை வளர்த்து வருகின்றோம். வீட்டிற்குள் நுழையும் போதே இயற்கையே வரவேற்பாளர்களாக வரவேற்கும் வகையில் உள்ளது. காய்கறி கழிவுகளை 40 நாட்கள் மக்க வைப்பதன் மூலம் இயற்கை உரம் கிடைக்கிறது. வெளியே எவ்வித உரமும் வாங்குவது இல்லை. இதனால் செடிகளை தாக்கும் பூச்சிகளை விரட்டி செடிகள் வளர உதவுகின்றன. வீட்டு தோட்டத்தில் காய்கறி, கீரைகள், பழம் செடிகள் பராமரிப்பது மூலம் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. உடலுக்கு ஆரோக்கியம், மன அழுத்தத்தையும் போக்குகிறது.